சேலத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - போலீஸ் துணை கமிஷனரிடம் கோரிக்கை

சேலத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் துணை கமிஷனரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-27 22:05 GMT
சேலம்,

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தடுப்பது பற்றி மாநகர போலீஸ் துணை கமிஷனர் செந்திலை அன்னை அறக்கட்டளை நிறுவனர் ராமன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- சேலம் முள்ளுவாடி கேட், முதல் மற்றும் 2-வது அக்ரஹாரம், சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, பொன்னம்மாபேட்டை, குகை பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பினர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கடைவீதி மற்றும் காந்தி சிலை போன்ற பகுதிகளில் அதிகமாக கூட்ட நெரிசலும் ஏற்படும். இதனால் இந்த பகுதிகளில் கூடுதல் காவலர்களை நியமித்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

அதேபோல், ஆனந்தா பாலம் என்ற இடத்திலிருந்து டி.எம்.எஸ். செட், பொன்னம்மாபேட்டை ரெயில்வே கேட் வரையிலும் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுதவிர, அதிகளவில் ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட அதிக ஒலி ஏற்படுத்தக்கூடிய ஏர் ஹாரன்களை பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. எனவே, ஷேர் ஆட்டோக்களின் ஆவணங்களை தணிக்கை செய்ய வேண்டும். சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கூடுதலாக போக்குவரத்து போலீஸ்காரர்களை நியமித்து போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது, அறக்கட்டளை கவுரவ தலைவர் சாரதி சீனிவாசன், பொறியாளர் சத்தீஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்