சுருக்குமடி, இரட்டைமடி வலையை தடை செய்ய வேண்டும் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

சுருக்குமடி, இரட்டைமடி வலையை தடை செய்ய வேண்டும் என மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டத.

Update: 2019-09-28 22:45 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளன. நாள்தோறும் இந்த பகுதியில் இருந்து காலா, சீலா, வாவல், மத்தி உள்ளிட்ட மீன்கள் பிடிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட அதிவேக எந்திர படகுகளையும், சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிக்கப்படுகிறது. இதனால் சிறு தொழில் மீனவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எங்கள் உழைப்பில் பிடித்த மீன்களை கீழே கொட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.

ஆலோசனை கூட்டம்

ஆறுகாட்டுத்துறையில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு மீனவர் கூட்டுறவு சங்க பொறுப்பாளர் தங்கத்துரை தலைமை தாங்கினார். கூட்டத்தில் மயில்வாகனம், ஜெகநாதன், முருகையன் உள்ளிட்ட பல்வேறு மீனவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வேதாரண்யம் தாலுகா கடற்பகுதியில் தொடர்ந்து இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதனால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சுருக்குமடி, இரட்டைமடி வலையை தடை செய்ய வேண்டும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மீன்வளத்துறையில் புகார் அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்