மகாளய அமாவாசையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா திரளான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று சமய புரத்தில் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Update: 2019-09-28 22:30 GMT
சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சமய புரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலுக்கு அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் வந்து அம்மனை வணங்கி, இரவில் அங்கு தங்கிச்சென்றால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் அமாவாசை நாட்களில் சமயபுரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு காலை 5 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு வந்தனர். அவர்கள் கட்டண தரிசன வரிசையிலும், பொது தரிசன வரிசையிலும் என நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். ஏராளமான பெண்கள் நெய்தீபங்கள் ஏற்றியும், கோவிலின் நுழைவு வாயிலில் தீபம் ஏற்றி தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். சில பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்தனர். சிலர் அக்னி சட்டி ஏந்தி வந்து அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

சிறப்பு அபிஷேகம்

மாலையில் உற்சவ அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் தலைமையில் மேலாளர் லெட்சுமணன், மணியக்காரர் ரமணி மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறையின் சார்பில் திருச்சி மற்றும் துறையூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் ஆகிய அனைத்து கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்