விடுதி, பள்ளிகளில் உள்ள சமையலர், காவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்

விடுதி மற்றும் பள்ளிகளில் உள்ள சமையலர், காவலர் காலிப்பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை விடுதி மற்றும் பணியாளர் சங்க மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-09-29 23:00 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை விடுதி மற்றும் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் தங்கமணி முன்னிலை வகித்தார். சங்க நிறுவனர் தங்கவேல் தொடக்கவுரையாற்றினார். சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அறவாழி பேசினார். சங்க உறுப்பினர்களின் ஆண்டு சந்தா, சங்க நிதிநிலை குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் பரமசிவம் பேசினார். கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களுக்கு அரசு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

நியமனம் செய்ய வேண்டும்

மாவட்டந்தோறும் சமையலர், காவலர்களுக்கு பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு பதவி மாற்று வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் விடுதி மற்றும் பள்ளிகளில் உள்ள சமையலர், காவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாணவர்கள் நலன்கருதி அனைத்து விடுதிகளிலும் இரவு காவலர் நியமனம் செய்ய வேண்டும். சேலம் மாவட்டத்தில் அதிகாரிகளின் குளறுபடியால் 19 சமையலர்களுக்கு 2017-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்கி, அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். விடுதி பணியாளர்களுக்கும் தமிழக அரசு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்கள் இன்னும் நியமனம் செய்யாத மாவட்டங்களில், துப்புரவு பணியாளர்களை அரசு நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெரியசாமி வரவேற்றார். முடிவில் பொதுச் செயலாளர் ராஜாங்கம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்