520 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா கலெக்டர்- எம்.எல்.ஏ. நடத்தினர்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பாக பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடத்தப்பட்டது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார்.

Update: 2019-09-30 22:30 GMT
பெரம்பலூர்,

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பாக பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடத்தப்பட்டது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில் கர்ப்பிணிகளுக்கு கலெக்டர் சாந்தா, ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் வளையல்கள் அணிவித்தும், சீர்வரிசை பொருட்களை கொடுத்தும் வளைகாப்பு விழாவை நடத்தினர். இதில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களிலிருந்து தலா 120 கர்ப்பிணிகளும், வேப்பூரில் 160 கர்ப்பிணிகளும் என மொத்தம் 520 பேருக்கு வளையல்கள் அணிவித்து, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் மதியம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.

இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சம்பத், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள், போஷன் அபியான் திட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்