அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை வசதியில்லாமல் பொதுமக்கள் பாதிப்பு

அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க வசதியில்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

Update: 2019-09-30 22:00 GMT
அணைக்கட்டு, 

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அணைக்கட்டு ஊராட்சியில் உள்ள தெருக்களின் இருபுறமும் உள்ள கால்வாய்களை தூர்வாரி சீரமைக்காததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் காய்ச்சல் பரவி வருகிறது.

இந்த நிலையில் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் மற்றும் அவரது தாயார் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு தற்காலிகமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மணி நேரத்தில் காய்ச்சல் தீவிரமடைந்ததால் மீண்டும் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்த முடிவை செவிலியரிடம் காண்பித்துள்ளனர்.

அதை பார்த்த செவிலியர் ரத்த அணுக்கள் குறைவாக உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் தாக்கி உள்ளதால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் பயந்துபோன அவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரிடம் கேட்டதற்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை வழங்க கூடிய மருத்துவ வசதிகள் இல்லை. ரத்த வங்கி இருக்க வேண்டும். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க தனியாக குளிர்சாதன வசதியுடன் அறை இருக்க வேண்டும். இந்த வசதிகள் இல்லாததால் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகிறோம் என்றார்.

மலை கிராம மக்கள் அணைக்கட்டு தாலுகாவில் அதிகம் வசிப்பதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருபவர்களை அலைக்கழிக்காமல் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உரிய சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்