ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து எடுக்கப்படும் சிறந்த குறும்படங்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு

ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து எடுக்கப்படும் சிறந்த குறும்படங்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் பேசினார்.

Update: 2019-10-01 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட போலீஸ்துறை மற்றும் இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் 50 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் கூறியதாவது:-

மோட்டார் சைக்கிள் ஓட்டும் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். நாம் நன்றாக சாலையில் சென்றாலும், எதிரே வருபவர்கள் எப்படி வருவார்கள் என்று தெரியாது. தொடர்ந்து தூங்காமல் கண் விழித்து நீண்ட தூரம் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படும். நாட்டில் அதிக சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு உள்ளது. சுனாமியில் இறந்தவர்களை விட சாலை விபத்துகளில் இறந்தவர்களே அதிகம். சாலை பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் தான் சாலை விபத்துகள் குறைந்துள்ளன.

குறும்படங்கள்

சுமார் 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றனர். மாணவர்கள், ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த குறும்படங்களை எடுத்து மாவட்ட போலீஸ் துறைக்கு அனுப்பலாம். அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசாக 3 நபர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும். மாணவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள்களை ஓட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முருகவேல், திருவேங்கடம், இன்ஸ்பெக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன், போக்குவரத்து போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்