அரியலூர் மாவட்டத்தில் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்.

Update: 2019-10-01 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், தீ விபத்து, நில ஆதிர்வு மற்றும் ஆழிப்பேரலை ஆகியவற்றிலிருந்து தென்னை மரங்களை பாதுகாக்க தங்களது தென்னை மரங்களை காப்பீடு செய்து கொள்வது அவசியமாகும். இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்படும் பட்சத்தில் இத்திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஒரு எக்டேருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும். விவசாயிகள் தாங்கள் காப்பீடு செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு முறை மற்றும் தற்போதைய நிலை குறித்து சரியான சுய முன்மொழிவு அளிக்க வேண்டும். தென்னை காப்பீடு செய்யும் விவசாயிகள் மரங்களில் வண்ணம் பூசி 1, 2, 3 என வரிசையாக இலக்கம் இட வேண்டும். காப்பீடு பிரீமியத்தில் மானிய தொகையாக மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவீதம் மற்றும் மாநில அரசு 25 சதவீதம் ஏற்றுக்கொள்கிறது. மீதமுள்ள 25 சதவீதம் பிரீமிய தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதுமானது.

தெரிவிக்க வேண்டும்

நன்கு பராமரிக்கப்படும் வளமான காய்கள் உள்ள தென்னை மரங்களை மட்டுமே வயதுக்கேற்ப பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும். 4 முதல் 15 வயது வரை உள்ள ஒரு தென்னை மரத்துக்கு இழப்பீடு தொகை ரூ.900 ஆகும். ஒரு மரத்துக்கு விவசாயி செலுத்த வேண்டிய பிரீமிய தொகை ரூ.2.25 ஆகும். 16 முதல் 60 வயது வரை உள்ள ஒரு தென்னை மரத்துக்கு இழப்பீடு தொகை ரூ.1,750 ஆகும். இம்மரத்திற்கு விவசாயி செலுத்த வேண்டிய பிரீமியம் ரூ.3.50 ஆகும். எனவே தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி, முன்மொழிவு படிவத்தை பெற்று பூர்த்தி செய்து பிரீமியத்தை “அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்” என்ற பெயரில் சென்னையில் செலுத்த தக்க வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும் போது தென்னை சாகுபடி மேற்கொண்டதற்கான நில ஆவணங்களான தென்னை சாகுபடி சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தென்னை மரங்கள் இழப்பு ஏற்பட்டால் 15 நாட்களுக்குள் “அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்“ நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தங்கள் வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்