கன்னியாகுமரியில் பராமரிப்பு இல்லாத காமராஜர் மணிமண்டபம் அதிகாரிகள் கவனிப்பார்களா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

கன்னியாகுமரியில் காமராஜர் மணிமண்டபம் பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்துள்ளது. எனவே அதனை அதிகாரிகள் கவனித்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2019-10-01 22:30 GMT
கன்னியாகுமரி,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் 1903-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி விருதுநகரில் பிறந்தார். 1954-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை 9 ஆண்டுகள் தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார்.

1975-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி சென்னையில் இயற்கை எய்தினார். அவரது உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டு கடல், நதி, ஆறு ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் கரைக்கப்பட்டது.

மணிமண்டபம்

அதில் ஒரு அஸ்தி கலசம் 1975-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. முன்னதாக அவருடைய அஸ்தி கலசம் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்தில் அதை நினைவு கூரும் வகையில் காமராஜருக்கு மணி மண்டபம் எழுப்பப்பட்டு உள்ளது. 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.

மண்டபத்தின் மையப்பகுதியில் பெருந்தலைவர் காமராஜரின் மார்பளவு வெண்கலசிலை அமைக்கப்பட்டு உள்ளது. மண்டபத்தில் பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் 50-க்கும் மேற்பட்ட அரியவகை புகைப்படங்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன. மண்டபத்தில் நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 வரை இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த மண்டபத்தை பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

சேதம் அடைந்துள்ளது

கடந்த சில ஆண்டுகளாக மண்டபம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மண்டபத்தில் உள்ள ஜன்னல்கள் உப்புக்காற்றினால் சேதமடைந்து காணப்படுகிறது. மேற்கூரையில் சிலந்தி மற்றும் வண்டுகள் கூடுகட்டி வாழ்கின்றன. மண்டபத்தின் சுற்றுச்சுவரில் இரும்புகம்பிகள் துருப்பிடித்து உடைந்து காணப்படுகிறது. வர்ணம் பூசப்படாமல் செல்லரித்து காணப்படுகிறது.

மண்டபத்தின் கிழக்கு பக்கம் காந்தி மண்டபத்தையொட்டி உள்ள சுற்றுச்சுவர்கள் உடைந்து மழையினால் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக காணப்படுகிறது. மேலும், மேற்கு பக்கம் உள்ள பூங்காவும் பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. அலங்கார செடிகள் அனைத்தும் பட்டுப்போய் காட்சி அளிக்கிறது.

சுற்றுலா பயணிகள் வேதனை

உலகம் முழுவதும் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் காந்தி மண்டபத்தையும், காமராஜர் மண்டபத்தையும் பார்க்காமல் செல்வது கிடையாது. இந்த மண்டபங்களை பார்வையிடம் சுற்றுலா பயணிகள், பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்து கிடப்பதை கண்டு வேதனை தெரிவிக்கின்றனர். அதாவது நாட்டுக்கு பாடுபட்ட தலைவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபங்களை பராமரிப்பதில் அரசு ஏன் அலட்சியம் காட்டுகிறது? என்று கேள்வி எழுப்பும் சுற்றுலா பயணிகள், இதனை விரைந்து சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள மார்பளவு சிலைக்கு இன்று (புதன்கிழமை) அனைத்து கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

மேலும் செய்திகள்