கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் படுகொலை: கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை - நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மோகனூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கட்டிட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-10-01 22:45 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆர்.சி.நகரை சேர்ந்தவர் நவலடி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி எலிசபெத் (வயது 45). விதவையான எலிசபெத் மோகனூரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி எலிசபெத் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் மோகனூர் தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பங்காரு (47) என்பவர் எலிசபெத்தை தலையில் கல்லை போட்டு கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பங்காருவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இவ் வழக்கில் வக்கீல் சுசீலா வாதாடினார். இவ்வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பங்காருக்கு நீதிபதி சசிரேகா ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்