பிரதமர் மோடி, சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் வருவதையொட்டி, மாமல்லபுரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

Update: 2019-10-02 23:15 GMT
மாமல்லபுரம், 

பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் 2 நாள் அரசு முறை பயணமாக சென்னை அருகே உள்ள சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு வருகின்றனர். இங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கும் அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களையும் கண்டுகளிக்கின்றனர்.

இருநாட்டு வர்த்தகம் மற்றும் உறவுகள் தொடர்பாக கடற்கரை கோவில் சிற்பங்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கிய ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இரு தலைவர்கள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் நடைபெறும் பல்வேறு மேம்பாட்டு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை அமைக்கும் பணிகள், புராதன சின்னங்கள் உள்ள இடங்களில் தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் ஆயத்த பணிகளை அவர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வு பணிகளில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை தலைவர் திரிபாதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டலில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இரு நாட்டு தலைவர்கள் வருகையும், இங்கு பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகள் கையெழுத்தாவதும் தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

பிரதமர் மோடிக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக சர்வதேச உளவு அமைப்பு எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

முன்னதாக மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தினார். மாமல்லபுரம் வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பயன்படுத்துவதற்காக துணிப்பைகள், காகித கூடைகள், மண் குவளைகள், காகித டம்ளர்கள் ஆகியவற்றை அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ், மாவட்ட கலெக்டர் பொன்னையா, காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அதி.மு.க. செயலாளர் எஸ்.ஆறுமுகம், பேரூராட்சி நிர்வாக அதிகாரி லதா, மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக்குழும உறுப்பினர் ஏ.கணேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பி.ஏ.எஸ்வந்த்ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்