அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு

பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை அறிந்து தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-03 22:30 GMT
வில்லியனூர், 

புதுச்சேரி பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக 1031 என்ற இலவச தொலைபேசி எண் செயல்பட்டு வருகிறது. இந்த எண்ணுக்கு நேற்று மாலை மர்மநபர் ஒருவர் பேசினார். அவர் மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் போலீசார் வில்லியனூர் அருகே வி.மணவெளியில் உள்ள அமைச்சரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் குடும்பத்தினர் இருந்தனர். அவர்களிடம் வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரையும் வீட்டில் இருந்து போலீசார் வெளியேற்றினர்.

வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் அமைச்சரின் வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். வீட்டில் இருந்த வாகனங்கள் உள்பட சந்தேகத்துக்குரிய இடங்களில் எல்லாம் சோதனை நடத்தப்பட்டது. போலீஸ் மோப்ப நாயும் இதில் ஈடுபடுத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இதனை தொடர்ந்து புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள அமைச்சரின் மற்றொரு வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் விரைந்து சென்றனர். அங்கும் தீவிர சோதனை நடத்தியதில், எதுவும் கிடைக்கவில்லை. எனவே தொலைபேசியில் வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து தொலைபேசியில் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மர்ம அழைப்பு வந்த எண்ணை கொண்டு அது யாருடையது, எங்கிருந்து வந்தது என்று தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில் அமைச்சர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய தகவலை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் வி.மணவெளியில் உள்ள வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மாதம் 2-ந் தேதி அமைச்சர் கந்தசாமி வீட்டுக்கு இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்