பஸ் வழித்தடத்தை மாற்றக் கோரி கடையடைப்பு, உண்ணாவிரதம்

காரைக்குடியில் பஸ் வழித்தடத்தை மாற்றக்கோரி வணிகர்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Update: 2019-10-04 23:15 GMT
காரைக்குடி,

காரைக்குடி வணிகர்கள் சங்கத்தின் சார்பில் காரைக்குடி ராஜாஜி பஸ்நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி கடையடைப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு வணிகர்கள் சங்க தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் ராஜா, பொருளாளர் பொசலான், கவுரவத்தலைவர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காரைக்குடியிலிருந்து திண்டுக்கல், மதுரை, கோவை, பழனி, பரமக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களுக்கு செல்லும் பஸ்களை ராஜாஜி பஸ்நிலையத்திலிருந்து இயக்க வேண்டும். நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதையொட்டி காரைக்குடியில் வணிகர்கள் கடையடைப்பு செய்தனர். அதில் ராஜாஜி பஸ்நிலையம், கோவிலூர் சாலை முதல் போலீஸ் பீட், 2-வது போலீஸ் பீட் வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து கட்சியினர், வணிகர்கள், பயணிகள் நலச்சங்கத்தினர் உள்பட அனைத்து தரப்பு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதுபற்றி தகவலறிந்த கலெக்டர் ஜெயகாந்தன் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். பின்பு அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், போராட்டக்காரர்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதைப்பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுவை பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்