அரசு ஒதுக்கிய வீட்டுமனைக்கு 28 ஆண்டுகளாக பட்டா வழங்கப்படவில்லை பொதுமக்கள், உதவி கலெக்டரிடம் முறையீடு

தஞ்சை அருகே அரசு ஒதுக்கிய வீட்டுமனைக்கு 28 ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாதது குறித்து பொதுமக்கள் உதவி கலெக்டரிடம் முறையிட்டனர்.

Update: 2019-10-05 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் ராஜீவ்காந்தி நகர், இந்திராநகர் உள்ளது. இந்த பகுதியில் 280 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களுக்கு வீட்டுமனையை தமிழக அரசு கடந்த 1990-91-ம் ஆண்டில் ஒதுக்கியது. ஆனால் ‘அ’ பதிவேட்டில் இது குறித்து இடம் பெறாததால் இந்த பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதியும் இதுவரை இல்லை. மேலும் இவர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டாலும் பட்டா வழங்கப்படவில்லை.

இதையடுத்து இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் பேர்நீதிஆழ்வார் தலைமையில் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் பெஞ்சமின், என்ஜினீயர் சங்க செயலாளர் ராமலிங்கம், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு ஆகியோர் முன்னிலையில் தஞ்சை உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று உதவி கலெக்டர் சுரேசிடம், பட்டா வழங்காதது குறித்து முறையிட்டனர். மேலும் கோரிக்கை மனு ஒன்றையும் உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர்.

அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

பட்டா இல்லை

எங்கள் பகுதியில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு 280 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு தமிழக அரசால் இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. அரசால் வழங்கப்பட்ட இடத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் வீடு கட்டி வசித்து வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை. மேலும் எங்கள் பகுதி கிராம கணக்கில் பதிவு செய்யாமல் இருப்பதால் மின் இணைப்பு மற்றும் அரசு சலுகைகள் பெறுவதில் சிரமமாக உள்ளது. போக்குவரத்து வசதியும் இல்லை. எனவே எங்களுக்கு பட்டா வழங்கவும், உரிய வசதிகள் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்