கடலூர் வில்வநகரில் வீட்டின் கழிவுநீரை ரோட்டில் விட்டவருக்கு அபராதம் - கலெக்டர் நடவடிக்கை

கடலூர் வில்வநகரில் கழிவுநீரை ரோட்டில் விட்டவருக்கு அபராதம் விதித்து கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.

Update: 2019-10-05 22:30 GMT
கடலூர்,

கடலூர் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை ஆய்வு செய்வதற்காக கலெக்டர் அன்பு செல்வன் நேற்று காலையில் வில்வநகருக்கு வந்தார்.

வில்வநகரில் உள்ள தெருக்களில் அவர் நடந்து சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். அப்போது மணி என்பவரது வீட்டில் இருந்து கழிவுநீர் ரோட்டில் பாய்ந்தோடியது. இதனை கண்ட கலெக்டர் அன்பு செல்வன் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து, பாதாள சாக்கடையில் கழிவுநீரை விடாமல் ரோட்டில் விடுவது ஏன்? என கண்டித்ததோடு, அவருக்கு அபராதம் விதிக்கும் படி நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

அந்த நபரிடம் ஆணையாளர் அரவிந்த்ஜோதி விசாரித்த போது, அவர் பாதாள சாக்கடை இணைப்பு பெறவில்லை என்று தெரியவந்தது.

இதன்பிறகு அப்பகுதியில் துப்புரவு பணிகளை பார்வையிட்டுக்கொண்டு சென்ற கலெக்டர் அன்புசெல்வனை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு, இப்பகுதிக்கு துப்புரவு தொழிலாளர்கள் சரியாக வருவது கிடையாது, கலெக்டர் வருவதை தெரிந்து கொண்டதால் தான் அவசரம் அவசரமாக துப்புரவு பணிகளை செய்து உள்ளனர் என்று சரமாரியாக குறை சொன்னார்கள். அவர்களிடம் இனிமேல் துப்புரவு பணிகள் சரியாக நடக்கும் என்று கலெக்டர் அன்பு செல்வன் கூறினார்.

பின்னர் அவர் அப்பகுதி மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் கடலூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொசு மருந்து அடிக்கும் பணிகளை பார்வையிட்டு, பள்ளி மாணவர்களுக்கு தூய்மை தூதுவர் அடையாள அட்டையை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் அன்பு செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்கப்படுகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தற்காலிக களப்பணியாளர்களை நியமித்து உள்ளோம். ஊராட்சி பகுதிகளில் 260 பேரும், பேரூராட்சி பகுதிகளில் 155 பேரும், நகராட்சி பகுதிகளில் 156 பேரும் நியமனம் செய்யப்பட்டு கொசு ஒழிப்பு பணி மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் காய்ச்சல் மற்றும் நோய் அறிகுறிகள் காணப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு டெங்கு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இந்நோய் குறித்தும், இந்நோயினை கட்டுப்படுத்தும் விதம் குறித்தும் பல்வேறு விதமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தை டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட அரசுடன் இணைந்து பொதுமக்களும் பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) டாக்டர் அரவிந்த்ஜோதி கூறுகையில், பாதாள சாக்கடை இணைப்பு பெறாமல், கழிவுநீரை ரோட்டில் விட்டவருக்கு கலெக்டர் உத்தரவுப்படி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த நபருக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா, மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்