தலையாரி கொலைக்கு காரணமான கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றிய கலெக்டர்; அதிகாரிகளுடன் நேரில் சென்று அதிரடி நடவடிக்கை

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட தலையாரி கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த நிலத்தை கலெக்டர் ஜெயகாந்தன் மேற்பார்வையில் அதிரடியாக மீட்டனர்.

Update: 2019-10-05 23:15 GMT
தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூரில் 13 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது. இதன் மூலம் 50 ஏக்கருக்கு மேல் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் 6 ஏக்கர் கண்மாய் புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்தனர். கிராம மக்களின் புகாரை யடுத்து கடந்த மாதம் 30-ந் தேதி வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் ஆக்கிரமிப்பு செய்த 3 ஏக்கர் நிலத்தை மீட்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த ஆத்திரத்தில் தலையாரி ராதா கிருஷ்ணனை கணேசன் வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலையாரி கொலை செய்யப்பட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் கண்மாய் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நேற்று கலெக்டர் ஜெயகாந்தன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

அவரது தலைமையில் நேற்று மகளிர் திட்ட இயக்குனர் அருள்மணி, கோட்டாட்சியர் சங்கரநாராயணன், தாசில்தார் மேசியாதாஸ் ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 3 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. இதன் மூலம் 6 ஏக்கர் கண்மாய் நிலம் மீட்கப்பட்டது. கலெக்டர் ஜெயகாந்தன் கூறுகையில், ‘இதேபோல் மாவட்டத்தில் கண்மாய் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும்,‘என்றார்.

மேலும் அவர் தலையாரி ராதாகிருஷ்ணன் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர், குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் ‘கொலை குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராதாகிருஷ்ணனின் குடும்பத்தார் கேட்டுக் கொண்டனர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்