உடுமலை பகுதியில் புழுதி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

உடுமலை பகுதியில் புழுதி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

Update: 2019-10-05 22:30 GMT
போடிப்பட்டி,

கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரம் அமைந்துள்ளது. மேலும் தாலுகா அலுவலகம், நீதிமன்றங்கள், வார சந்தை, சார்பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்கள் இங்கு அமைந்துள்ளது. இதுதவிர ஏராளமான வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளது. இதனால் தினசரி எல்லா நேரங்களிலும் உடுமலை நகர சாலைகளில் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.

இந்தநிலையில் பராமரிப்பில்லாத சாலைகளால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்படும் நிலை உள்ளது. அந்தவகையில் தற்பொழுது உடுமலை தாராபுரம் சாலை, பழனி சாலை உள்ளிட்ட சாலைகள் புழுதி பறக்கும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் திணறும் நிலை உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

பெரும்பாலான சாலைகளில் மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தடுப்புகளை ஒட்டி மண் குவியல் நிறைந்திருக்கிறது. இவை மழைக்காலங்களில் மழைநீரால் அடித்து வரப்பட்டு, காற்றின் காரணமாகவும் மையத்தடுப்புகளை ஒட்டி குவிந்துள்ளது. லேசான மழை பெய்யும் சமயங்களில் இந்த மணல் சாலை முழுவதும் பரவி விடுகிறது. இதனால் சாலை வழியாக வாகனங்கள் கடக்கும்பொழுது புழுதி பறக்கிறது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களில் புழுதி மண் விழுந்தும், மணலில் தடுமாறி கீழே விழுந்தும் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதுதவிர தொடர்ச்சியாக புழுதி பறப்பதால் இந்த பகுதியிலுள்ள வணிக நிறுவனங்களிலுள்ள பொருட்களில் புழுதி படிந்து வீணாகிறது. மேலும் அருகிலுள்ள குடியிருப்புவாசிகளுக்கு சுவாசக்கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதேபோல பஸ் நிலையத்துக்கு அருகில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளும் பகுதியில் சாலை முழுவதும் புழுதி மண் நிறைந்திருக்கிறது. இதனால் அந்த பகுதியைக் கடப்பவர்கள் மூக்கை பொத்திக் கொண்டு கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அனைத்து பகுதிகளிலும் சாலையில் படிந்துள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பகுதிகளில் சாலையிலும், மையத்தடுப்புகளை ஒட்டியும் மணல் குவியல் ஏற்படாதவாறு அடிக்கடி அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்