காரிமங்கலம் அருகே பஸ் கவிழ்ந்து டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம்

காரிமங்கலம் அருகே பஸ் கவிழ்ந்து டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-10-06 22:45 GMT
காரிமங்கலம்,

தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று அரசு டவுன் பஸ் ஒன்று மல்லிக்குட்டை, பேகாரஅள்ளி வழியாக காரிமங்கலத்திற்கு வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை செல்வம் என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக சின்னசாமி என்பவர் இருந்தார். இதில் 16 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் காரிமங்கலம் அருகே உள்ள போத்தாபுரம் பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் படுகாயம் அடைந்த டிரைவர் செல்வம் உள்ளிட்ட 6 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ் கண்டக்டர் உள்ளிட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

அமைச்சர் ஆறுதல்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காயம் அடைந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கே.பி.அன்பழகன், கலெக்டர் மலர்விழி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவ கல்லூரி முதல்வருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்