தாராபுரத்தில் சாலையில் குப்பைகளை கொட்டி பொதுமக்கள் மறியல்

தாராபுரத்தில் சாலையில் குப்பைகளை கொட்டி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-07 00:02 GMT
தாராபுரம்,

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட, 1-வது வார்டில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றாமல் இருப்பதால், குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு. தொற்றுநோய்கள் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் குப்பைகளை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் நேற்றுமாலை தாராபுரம்-திருப்பூர் சாலையில் காமராஜபுரத்தில், சாலையின் குறுக்கே குப்பைகளை கொட்டிவைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து காமராஜபுரத்தைச்சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

வார்டுகளில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டிகளை, கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு, நகராட்சி நிர்வாகம் அகற்றி விட்டது. இதனால் குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லை. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வீடுகளுக்கு வந்து குப்பைகளை சரிவர வாங்குவதில்லை இதனால் காமராஜபுரம் பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

மேலும் கழிவுநீர் சாக்கடைகளை நீண்ட காலமாக தூர்வாராமல் இருப்பதால், கழிவுநீர் கால்வாய்கள் அடைபட்டு, கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடிக்கொண்டிக்கிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. இது தவிர இப்பகுதி சிறுவர்கள் விளையாடுவதற்காக பொதுகழிப்பிடம் அருகே ஒரு விளையாட்டுத்திடல் உள்ளது. இந்த திடலில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை குவித்து வைக்கிறார்கள்.

அவ்வப்போது அந்த குப்பைகளுக்கு தீ வைத்து விடுகிறார்கள். இதனால் விளையாட்டு திடலில் சிறுவர்கள் விளையாட முடியாத நிலை இருந்து வருகிறது. பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் காமராஜபுரத்தில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். கழிவுநீர் சாக்கடைகளை தூர்வார வேண்டும் என்று கோரி, சாலையில் குப்பைகளை கொட்டி வைத்து சாலைமறியல் போராட்டத்தை நடத்தினோம் என்று கூறினார்கள்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்