வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் ரெயில் என்ஜின் டிரைவர் உள்பட 4 பேர் சாவு

வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் ரெயில் என்ஜின் டிரைவர் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-10-08 22:15 GMT
ஈரோடு,

சேலம் மாவட்டம் வாழப்பாடி நட்டார்மங்கலம் பகுதியை சேர்ந்த செல்வராஜ். இவரது மகன் அய்யனார் (வயது 24). இவர் பெருந்துறையில் உள்ள சிப்காட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து பெருந்துறை நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பவானியை அடுத்த சித்தோடு சமத்துவபுரம் மேடு அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் அய்யனாரின் மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அய்யனார் இறந்துவிட்டதாக கூறினர்.

இதேபோல் ஈரோடு பெரியசேமூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (39). இவர் ஈரோட்டில் இருந்து சித்தோடு அருகே உள்ள நசியனூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நசியனூரை அடுத்த நரிப்பள்ளம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளும், சரவணனின் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து சரவணன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த 2 விபத்து சம்பவங்கள் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள செல்வமருதூரை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 35). இவர் சேலம் கோட்டத்தில் சரக்கு ரெயில் என்ஜின் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நேகா (24). இவர்களுடைய மகன் ஆதிநாத் (3).

சின்னதுரை தற்போது கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஆலாங்கொம்பு வீராசாமி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தன்னுடைய பணி நிமித்தமாக சிறுமுகையில் இருந்து ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். விஜயமங்கலத்தை அடுத்த வாய்ப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ் ஒன்று ரோட்டின் குறுக்கே திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்புறத்தில் சின்னதுரையின் ஸ்கூட்டர் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து சின்னதுரை கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி. அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சின்னதுரை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னிமலை அருகே உள்ள வெள்ளோடு முகாசிபுலவன்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி லட்சுமி (50). இவர் நேற்று முன்தினம் வெள்ளோடு அருகே உள்ள கவசப்பாளி பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் லட்சுமி மீது மோதியது.

இந்த விபத்தில் லட்சுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் வெள்ளோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்