போளூர், திருவண்ணாமலையில் போக்குவரத்து விதிகளை மீறிய 11 ஆயிரம் பேர் மீது வழக்கு

போளூர் உட்கோட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 11 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.12¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Update: 2019-10-08 22:30 GMT
போளூர், 

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.குணசேகரன் மேற்பார்வையில் போளூர், கலசபாக்கம், கடலாடி, சேத்துப்பட்டு, ஜமுனாமரத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைக்குள் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ‘ஹெல்மெட்’ அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 1,368 பேர் மீதும், ‘ஹெல்மெட்’ அணியாமல் பின்னால் உட்கார்ந்து பயணித்த 575 பேர் மீதும், கார் ஓட்டும்போது ‘சீட் பெல்ட்’ அணியாமல் இருந்த 991 பேர் உள்பட போக்குவரத்து விதிகளை மீறிய பல்வேறு குற்றத்திற்காக மொத்தம் 4 ஆயிரத்து 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 100 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை 9 மாதங்களில் 21 ஆயிரத்து 606 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சத்து 18 ஆயிரத்து 140 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை உட்கோட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மேற்பார்வையில் திருவண்ணாமலை டவுன், தாலுகா, கிழக்கு, மங்கலம், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் ஆகிய போலீஸ் நிலைய எல்லைப்பகுதியில் கடந்த மாதம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2,845 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதாக 227 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1,195 பேர் மீதும் உள்பட மொத்தம் 7,715 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.8 லட்சத்து 91 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே, போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்