திருப்பூரில் பாத்திரக்கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.25 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பூரில் பாத்திரக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

Update: 2019-10-09 22:45 GMT
திருப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிகாரம் (வயது 45). இவருக்கு திருப்பூர்-அவினாசி ரோட்டில் திருமுருகன்பூண்டியில் சொந்தமாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 2 அடுக்குகளை கொண்டது. இதன் தரைதளத்தில் செருப்பு கடை நடத்தி வருகிறார். முதல் தளத்தில் பாத்திரக்கடை உள்ளது. 2-வது தளத்தில் ஜிகாரம் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு முதல் தளத்தில் உள்ள பாத்திரக்கடையில் இருந்து கரும்புகையாக வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடைக்கு வெளியே வந்தார். இதற்கிடையே பாத்திரக்கடையில் சிறிது நேரத்திற்கு பிறகு மளமளவென தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இது குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 3 வண்டிகளில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முதல் தளத்தில் தீப்பிடித்து எரியத்தொடங்கியதால், தீயணைப்பு வீரர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.

இதன் காரணமாக கிரேன் வரவழைக்கப்பட்டது. கிரேன் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த பயங்கர தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்