தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் - விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம் அருகே தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-09 22:00 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள குருவன் குப்பம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பொதுக்குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் கிராம மக்கள் குடிநீருக்காக பெரிதும் அவதியடைந்து வந்தனர். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் காலி குடங்களுடன் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும், விளை நிலங்களுக்கும் அலைந்து திரிந்து தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை அதே பகுதியில் உள்ள சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பியபடி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த ஆலடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள், தங்கள் பகுதியில் கடந்த 2 வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அத்தியாவசிய தேவைக்கு கூட குடிநீரின்றி நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள், விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பல கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்