வடிகால் வாய்க்கால் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் திடீர் போராட்டம் - ராமநத்தம் அருகே பரபரப்பு

ராமநத்தம் அருகே வடிகால் வாய்க்கால் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-09 21:45 GMT
ராமநத்தம், 

ராமநத்தம் அருகே உள்ள கொரக்கை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்வதற்கு வசதியாக, வடிகால் வாய்க்கால் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தெருக்களிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் கழிவுநீர் வடிந்து செல்வதற்கு வசதியாக வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, கொரக்கை பகுதியில் நடைபெறும் குடிமராமத்து பணியை பார்வையிட வருவதை அறிந்த கிராம மக்கள் நேற்று திடீரென அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வடிகால் வாய்க்கால் அமைத்து தரக்கோரி கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையே அங்கு வந்த கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம மக்கள், தங்கள் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர் வடிந்து செல்வதற்கு வசதியாக 2 இடங்களில் வடிகால் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அப்போது கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, வடிகால் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்