ஆதிதிராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள சமையல், துப்புரவு பணிக்கு விண்ணப்பம் வாங்க குவிந்த பட்டதாரிகள் - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, விடுதிகளில் காலியாக உள்ள சமையல், துப்புரவு பணிக்கு விண்ணப்பம் வாங்க ஏராளமான பட்டதாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.

Update: 2019-10-09 22:15 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 50-க்கும் மேற்பட்ட உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்கு 112 சமையலர் மற்றும் 27 துப்புரவு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு 35 வயதுக்கு உட்பட்ட நன்கு சமைக்க தெரிந்த, 10-ம் வகுப்பு தேர்ச்சி ெபறாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்கான விண்ணப்பம் நேற்று முதல் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் சமையல், துப்புரவு பணிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதற்காக காலை 9 மணி முதல் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் விண்ணப்பம் வாங்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்தனர்.

குறிப்பாக பட்டதாரிகள் மற்றும் பொறியியல் முடித்த இளைஞர்கள் அதிகளவு விண்ணப்பம் வாங்க வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பம் வாங்க முயன்றனர். அப்போது அதிகாரிகள் இந்த பணிகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்க இயலாது என்று தெரிவித்தனர். அதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து அதிகாரிகள் விண்ணப்பம் வழங்கும் இடத்தின் அருகே 10,11, 12 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகளுக்கு விண்ணப்பம் வழங்கப்படாது. 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும் விண்ணப்பம் வழங்கப்படும்’ என்று அறிவிப்பு நோட்டீசை ஒட்டினர். தொடர்ந்து தகுதியுடைய பெண்கள், இளைஞர்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பம் வாங்கி சென்றனர்.

முதல்நாளான நேற்று மாலை 5 மணி வரை 376 விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டது என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 18-ந் தேதிக்குள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமையல், துப்புரவு பணிக்கு விண்ணப்பம் வாங்க ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் குவிந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்