டெங்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத தனியார் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் கலெக்டர் உத்தரவு

டெங்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத தனியார் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

Update: 2019-10-09 23:00 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சோனா நகர், மிட்டாய்புதூர், திருமால் நகர், பாரதி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று டெங்குநோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் ராமன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சலுக்கு காரணமான டயர், தேங்காய் சிரட்டைகள், காலிக்குடங்கள் போன்ற தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என்றும், திறந்தநிலை தொட்டிகளில் நீர் தேங்காத வகையிலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

மேலும் சோனா நகரில் தனியார் பள்ளியில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். அங்கிருந்த திறந்தவெளி தண்ணீர் சேமிப்பு தொட்டிகளை பார்வையிட்டார். அப்போது கொசு உற்பத்தியாகும் டீ கப், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய சாக்குகள் ஆகியவை கண்டறியப்பட்டன.

ரூ.20 ஆயிரம் அபராதம்

இதையடுத்து அவற்றை உடனடியாக அகற்ற தனியார் பள்ளி மேலாளருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் டெங்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத அந்த தனியார் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, மாநகர் நல அலுவலர் டாக்டர் பார்த்திபன், மாநகராட்சி உதவி ஆணையர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் திலகா, உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், நித்யா உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்