கடையம் அருகே பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரக்கொலை நண்பர்கள் 2 பேர் கைது

கடையம் அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-11 23:15 GMT
கடையம்,

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதாபுரத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வம் (வயது 33). அவருடைய மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு ராமகிரு‌‌ஷ்ணன் (11), சுயம்புராஜ் (10) என்ற 2 மகன்களும், பிரியதர்‌ஷினி (9) என்ற மகளும் உள்ளனர்.

முத்துச்செல்வம் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் மது அருந்துவதற்காக வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் முத்துச்செல்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நேற்று காலை புலவனூர்-மேட்டூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள திறந்தவெளி இடத்தில் வாலிபர் ஒருவர், தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபா‌ஷினி, கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், ஜெயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் முத்துச்செல்வம் என்பதும், அவரது கழுத்தில் மதுபாட்டிலால் குத்திய காயமும், உடல் அருகில் ரத்தக்கறை படிந்த பாறாங்கல் ஒன்றும் கிடந்தது. எனவே, அவரை கழுத்தில் பாட்டிலால் குத்தி, அதன்பிறகு தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளதும் தெரியவந்தது.

நெல்லையில் இருந்து டைகர் எனும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால், யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர் அகஸ்டா வந்து, அங்கு பதிவான தடயங்களை பதிவு செய்தார். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக முத்துச்செல்வத்தின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தேவராஜன் மகன் சிலம்பரசன் (35), சவுந்திரபாண்டியன் மகன் சூட்சமுடையார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிலம்பரசன், முத்துச்செல்வம், சூட்சமுடையார் ஆகியோர் ஒரே செங்கல் சூளையில் வேலை பார்த்தனர். சிலம்பரசனிடம், முத்துச்செல்வம் மனைவி ராஜகுமாரி செலவுக்காக பணம் வாங்கியுள்ளார். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிலம்பரசனும், சூட்முடையாரும் ராஜகுமாரியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ராஜகுமாரியை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து ராஜகுமாரி கொடுத்த புகாரின் பேரில் சிலம்பரசன், சூட்சமுடையார் ஆகிய இருவரும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த இருவரும் முத்துச்செல்வத்திடம், உன் மனைவி எங்கள் மீது கொடுத்த வழக்கை வாபஸ் வாங்க கூறியுள்ளனர். தொடர்ந்து நேற்று மூன்று பேரும் மது அருந்தும் போது வாபஸ் வாங்க கூறினர். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிலம்பரசன், சூட்சமுடையார் ஆகிய இருவரும் சேர்ந்து முத்துச்செல்வத்தை பாட்டிலால் குத்தி, தலையில் கல்லைப்போட்டும் கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்