தாசில்தார் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - வீட்டுமனைப்பட்டா வழங்க கோரிக்கை

வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2019-10-11 22:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தாசில்தார் அலுவலக வளாகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு ஒன்றிய செயலாளர் அபிமன்னன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாலதி, மாநகர செயலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை, வீட்டுமனைப்பட்டாவும் வழங்கிட நிரந்தரமாக சிறப்பு திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் படி 60 வயது முடிவடைந்த அனைத்து முதியோர்களுக்கும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டப்படி 200 நாட்கள் வேலையும், தினக்கூலியை ரூ.400 ஆக உயர்த்தியும் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட 1 லட்சம் வீடுகட்டும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பின்னர் தாசில்தாரை விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை படித்து பார்த்த அவர், நீர்நிலைகள், நீர் வரத்து வாய்க்கால் பகுதிகளை தவிர பிற புறம்போக்கு நிலங்களை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கலாம் என அரசு உத்தரவு போட்டு இருக்கிறது. அதனால் அந்த நிலங்களை வகைமாற்றம் செய்து 1 மாதத்திற்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வல்லம், ஆலக்குடி பகுதிகளில் ஏற்கனவே இடத்தை தேர்வு செய்து இருக்கிறோம் என்றார்.

இதையடுத்து வெளியே வந்த விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கூறும்போது, தஞ்சை, பூதலூர், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 5 இடங்களில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி, மனு அளித்து இருக்கிறோம். பூதலூரில் 170 பேருக்கு பட்டா தயாராக இருப்பதாகவும், விரைவில் வழங்கப்படும் எனவும் தாசில்தார் தெரிவித்துள்ளார். மற்ற இடங்களில் இன்னும் 1 மாதத்திற்குள் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளதால் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படவில்லை. அதிகாரிகள் அளித்த உறுதியின்படி பட்டா வழங்கப்படவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்