நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உள்ளாட்சி தேர்தல் பொருட்கள் பிரித்து அனுப்பப்பட்டது

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் பொருட்களை பிரித்து அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது.

Update: 2019-10-11 23:20 GMT
நெல்லை,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல், தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் நடத்துவது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. சமீபத்தில் உள்ளாட்சி வார்டுகள் வாரியாக வாக்காளர் பட்டியலை பிரித்து தயாரித்து வெளியிடப்பட்டது.

மேலும் தேர்தலுக்கு தேவையான வாக்காளர் படிவங்கள், கவர் உள்ளிட்ட காகித பொருட்கள் மதுரை, திருச்சியில் உள்ள அரசு அச்சகங்களில் அச்சிடப்பட்டன. அவை நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டன. மேலும் தேர்தல் நடத்தும் பொருட்களும் கொண்டு வரப்பட்டன.

இந்த பொருட்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று பஞ்சாயத்து அதிகாரிகள் முன்னிலையில் பிரிக்கப்பட்டன. அவை 19 யூனியன்கள், 36 நகர பஞ்சாயத்துகள் மற்றும் 7 நகராட்சிகளுக்கு என தனித்தனியாக பிரிக்கப்பட்டன.

பின்னர் அவை லாரிகள் மூலம் அந்தந்த யூனியன், நகர பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்