மகனின் திருமணத்திற்கு பத்திரிகை கொடுத்துவிட்டு காரில் வந்த தம்பதி கடத்தல்? கரூரில் பரபரப்பு

மகனின் திருமணத்திற்கு பத்திரிகை கொடுத்து விட்டு காரில் வந்த தம்பதி கடத்தப்பட்டார்களா? என கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-10-12 23:15 GMT
கரூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பசல்நாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). இவர், மதுரை ஆரப்பாளையம் மேலபொன்னகரத்தில் தங்கி அங்கு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வசந்தாமணி (42). இவர்களுடைய மகன் பாஸ்கர் (27). இவர், சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி இரவு செல்வராஜ் தனது மனைவியுடன் காரில் சென்று திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள தனது தங்கைக்கு பத்திரிகை கொடுத்து மகனின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

பின்னர் இதுகுறித்து செல்வராஜ், செல்போன் மூலம் தனது மகன் பாஸ்கரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன்பிறகு அங்கிருந்து செல்வராஜ் தனது மனைவியுடன் காரில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவர்களை பாஸ்கர் செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர், தனது பெற்றோர் மாயமானது குறித்து உறவினர்களிடம் தெரிவித்து அவர்கள் மூலம் பல்வேறு இடங்களில் தேடினார். எனினும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கரூர் அருகே கரூர்-திருச்சி தேசியநெடுஞ்சாலை சுக்காலியூரில் கேட்பாரற்று ஒரு கார் மர்மமான முறையில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரை சுற்றிலும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. அங்கு திருமண பத்திரிகைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள், தாந்தோன்றிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்பட போலீசார் விரைந்து வந்து அந்த காரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கார், காணாமல் போனதாக கூறப்படுகிற செல்வராஜ், வசந்தாமணி ஆகியோர் பயணித்த கார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வெள்ளகோவிலில் பத்திரிகையை கொடுத்துவிட்டு மதுரையை நோக்கி செல்வராஜ்-வசந்தாமணி ஆகியோர் வந்ததாகவும், இடைப்பட்ட நேரத்தில் தான் அவர்கள் காணாமல் போயுள்ளனர் என தாந்தோன்றிமலை போலீசாரிடம் அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் நகை-பணத்திற்காக அந்த தம்பதியினர் கடத்தப்பட்டனரா? அல்லது அவர்கள் மாயமானதற்கு வேறு ஏதும் காரணமா? என்பது பற்றி தாந்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்