புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2019-10-12 21:45 GMT
தாடிக்கொம்பு, 

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விசே‌‌ஷ நாளாகும். இந்த மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவுகள் உட்கொள்வதை கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று பழனி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான லட்சுமி நாராயண பெருமாள் கோவில், வேணுகோபால பெருமாள் மற்றும் பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சவுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் பெருமாள் வைகுண்ட நாதர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து சுவாமிக்கு தயிர் சாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

தாடிக்கொம்புவை அடுத்த அகரம் சுக்காம்பட்டியில் அமைந்துள்ள வாஸ்தீஸ்வரர் கோவிலில், திருவேங்கட மலையப்பசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சின்னாளபட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவேங்கடமுடையான் திருக்கோவிலில் பெருமாளுக்கு தங்க கவசத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சின்னாளபட்டியில் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலில் 16 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயர் உடலில் பச்சை நிற வெல்வெட் துணி கொண்டு, திருமேனியில் கையில் பச்சை பதக்கம், தலையில் தங்க கிரீடம் வைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் அம்பாத்துரை பிரிவில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்