போச்சம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

போச்சம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-13 23:00 GMT
மத்தூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது காட்டாகரம் கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தென்பெண்ணை ஆற்று குடிநீர் திட்டத்தின் கீழ் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். குடிநீருக்காக அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது. மேலும் சிலர் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

சாலைமறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் நேற்று அப்பகுதியில் உள்ள சந்தூர் கூட்டுரோட்டுக்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் அங்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது முறையாக குடிநீர் வினியோகம் செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்