முசிறி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு

முசிறி ஊராட்சி காட்டுப்பாளையம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2019-10-14 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் முசிறி அருகே உள்ள காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நேற்று கலெக்டர் மெகராஜிடம் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

காட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்த காவிரி குடிநீர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக ஆபரேட்டரிடம் கேட்டபோது அவர் விரைவில் வந்து விடும் என்றார். ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் காவிரி குடிநீர் வரவில்லை.

இதற்கிடையே ஆழ்துளை கிணற்றில் இருந்த மோட்டார் பழுதானதால், கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கும், ஏளூர் ஊராட்சி பெருமாகவுண்டம்பட்டிக்கும் சென்று குடிநீர் பிடித்து வருகிறோம்.

எனவே எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்