எண்ணூரில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து சாலை மறியல் செய்த பொதுமக்கள் கைது

எண்ணூரில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-14 22:45 GMT
திருவொற்றியூர்,

சென்னை எண்ணூரில் உள்ள சத்தியவாணிமுத்து நகர், உலகநாதபுரம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் பல மாதங்களாக கழிவுநீர் அகற்றப்படாததால் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மலேரியா, டைப்பாய்டு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது.

மழைநீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

எனவே எண்ணூரில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து சென்னை எண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

ஆனால் அங்கு அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரமடைந்த 10-க்கும் மேற்பட்டோர், திடீரென அந்த அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர்.

ஆனால் அதிகாரிகள் வரும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் மறுத்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். அனைவரையும் எண்ணூர் சுனாமி குடியிருப்பில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்