குமரியில் மழை நீடிப்பு நாகர்கோவிலில் 29 மில்லி மீட்டர் பதிவு வீட்டு சுவர் இடிந்து விழுந்தது

குமரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நாகர்கோவிலில் அதிக பட்சமாக 29 மில்லி மீட்டர் பதிவானது. வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் தாய்-மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2019-10-15 23:00 GMT
நாகர்கோவில்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் ஏற்பட இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. எனினும் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. இதே போல நேற்று பல இடங்களில் மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்-29, பூதப்பாண்டி-3.3, களியல்-17, கன்னிமார்-4.6, குழித்துறை-16.4, புத்தன்அணை-2.2, சுருளோடு-5, குளச்சல்-3.2, இரணியல்-3, ஆரல்வாய்மொழி-13, குருந்தன்கோடு-14.6, முள்ளங்கினாவிளை-15, ஆனைகிடங்கு-3.2 என்ற அளவில் மழை பெய்தது. இதே போல அணை பகுதிகளில் பேச்சிப்பாறை-4, பெருஞ்சாணி-2.6, சிற்றார் 2-2, மாம்பழத்துறையாறு-3, முக்கடல்-2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

வீட்டு சுவர் இடிந்தது

மலையோர பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 165 கனஅடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 214 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 200 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 26 கனஅடியும், முக்கடல் அணைக்கு 1 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் பெருஞ்சாணி மற்றும் சிற்றார் 1 அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படிேய வெளியேற்றப்படுகிறது.

நாகர்கோவிலில் இரவு முழுவதும் பெய்த மழையால் ஒரு ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதாவது வடசேரி பயோனியர் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 65). இவருடைய மகன் செந்தில்குமார் (23). இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது பெய்த பலத்த மழை காரணமாக இவர்களது வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. சுவர் வெளிப்பக்கமாக விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக 2 பேரும் உயிர் தப்பினர்.

திற்பரப்பு

மேலும் மழை காரணமாக நாகர்கோவிலில் பல சாலைகள் சகதி மயமாக காட்சி அளித்தன. அதாவது அவ்வை சண்முகம் சாலை, கிறிஸ்துநகர் பிரதான சாலை, கோட்டார்- பீச்ரோடு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் சகதியால் படுமோசமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தொடர்ந்து ெபய்து வரும் மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதுபோல், குலசேகரம், பேச்சிப்பாறை, பொன்மனை, திருவட்டார், மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் மழை பெய்தது.

மேலும் செய்திகள்