மாவட்டம் முழுவதும் பலத்த மழை; விவசாய பணிகள் முழுவீச்சில் தொடங்கின

மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக விவசாய பணிகள் முழுவீச்சில் தொடங்கி உள்ளது.

Update: 2019-10-15 22:30 GMT
ராமநாதபுரம்,

வடகிழக்கு பருவமழை நாளை(வியாழக்கிழமை) முதல் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதவிர இதற்கு முன்னதாக வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. அதன் பின்னர் காலை 9 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாமல் பலத்த இடியுடன் தொடர்ந்து அடைமழையாக பெய்தது. இதனால் பொதுமக்கள் மழையை பார்த்து ஆனந்தமடைந்தனர். மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து குளம்போல் தேங்கி நின்றது. கடும் வறட்சியால் வெடிப்பு ஏற்பட்டிருந்த நிலங்கள் ஈரப்பதமடைந்தன.

கடந்த மாதம் ஓரிரு நாட்கள் பரவலாக நல்ல மழை பெய்ததாலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என்று ஆய்வு மையம் நம்பிக்கை தெரிவித்திருந்ததாலும் விவசாய பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொண்டனர். இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் உழவு பணிகள் முடிவடைந்து விதைப்பு நடந்திருந்தது. இந்த வயல்வெளிகளில் அரை அடி உயரத்திற்கு பயிர்கள் வளர்ந்துள்ளன. நேற்று பெய்த மழை இந்த பயிர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும்.

இதுதவிர, வடகிழக்கு பருவமழையின் தொடக்கமே அமர்க்களமாக இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் உழவு பணிகளை முழுவீச்சில் முடித்து விதைப்பு மற்றும் களைகொல்லி போடும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 95 சதவீத விதைப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால் இந்த மழை விவசாயத்திற்கும், அதன் மூலம் விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. விவசாய பணிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக விவசாய துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக காட்சிப்பொருளாகவே இருந்து வந்த பண்ணைக்குட்டைகள் அனைத்தும் இந்த மழையால் நீர் சேர்ந்துள்ளதை முதன்முதலாக காண முடிகிறது.

இதுதவிர, குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ள நீர்நிலைகளிலும் மழைநீர் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த நிலையில் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

ஆர்.எஸ்.மங்கலம்-30, தொண்டி-23.6, திருவாடானை-14, ராமநாதபுரம்-9.5, வாலிநோக்கம்-9, பள்ளமோர்குளம்-8, வட்டாணம்-5, மண்டபம்-4, பரமக்குடி-3.8, தங்கச்சி மடம்-2.2, பாம்பன்-1.8.

மேலும் செய்திகள்