அரூரில் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான 4 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்

அரூரில் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான 4 வணிக நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2019-10-15 23:00 GMT
அரூர்,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவின்பேரில் அரூர் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் நேற்று பேரூராட்சி பகுதிகளில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) சேகர், துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியன், முதுநிலை பூச்சியியல் வல்லுனர் ராமலிங்கம், மருத்துவ அலுவலர் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அரூரில் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள், பழைய இரும்பு கடைகள், மோட்டார் வாகன பழுது பார்க்கும் பட்டறைகள் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரப்பும் டெங்கு கொசுப்புழு உள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

4 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்

அப்போது 4 வணிக நிறுவனங்களில் பழைய பொருட்கள், டப்பாக்கள், டயர்களில் தண்ணீர் தேங்கி டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவது தெரியவந்தது. இதையடுத்து டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக காரணமாக இருந்த 4 வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்