பெரம்பலூர் மாவட்டத்தில் பூத்து குலுங்கும் கேந்தி பூக்கள் விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் கேந்தி பூச்செடிகளில் அதிகளவு பூக்கள் பூத்து குலுங்குகின்றன. ஆனால் அந்த பூக்களுக்கு மார்க்கெட்டில் சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2019-10-16 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை ஏமாற்றியதால் வறட்சியான சூழல் நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதித்து, நெல், கரும்பு சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை குறைந்ததால், அளவான தண்ணீரை கொண்டு மகசூல் கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது.

இதனால் பல்வேறு இடங்களில் விவசாயிகள் கோவில்களுக்கும், பல்வேறு விசே‌‌ஷங்களுக்கும் மாலையாக கட்டி பயன்படுத்தப்படும் கேந்தி பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். விசே‌‌ஷ காலங்களில் இந்த பூக்களால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். இந்த கேந்தி பூக்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கேந்தி பூச்செடிகளில் இருந்து அதிகளவு பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை விவசாயிகள் பறித்து விற்பனைக்காக பெரம்பலூர், ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது பெரம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே கேந்தி பூக்கள் பூத்து குலுங்கின்றன. இருப்பினும் பூக்களின் விற்பனை மந்தமாக உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

உற்பத்தி செலவு கூட...

இது குறித்து விவசாயி தங்கவேல் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கேந்தி பூச்செடிகளில் இருந்து அதிகளவு பூக்கள் கிடைக்கிறது. ஆனால் அதற்கேற்ற வருமானம் இல்லை. அந்த பூக்களுக்கு மார்க்கெட்டில் சரியான விலை கிடைப்பதில்லை. ஒரு ஏக்கர் நிலத்திற்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள கேந்தி பூக்களுக்கு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது. ஆயுத பூஜையையொட்டி கிலோ 40-க்கு விலை போன கேந்தி பூக்கள் தற்போது கிலோ ரூ.20-க்கும் தான் பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் வாங்குகின்றனர். இதனால் உற்பத்தி செலவை கூட எடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கோழிக் கொண்டை பூக்கள் கூட ஓரளவு உள்ளூர் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஆனால் கேந்தி பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் ஏதாவது துக்க நிகழ்ச்சி நடந்தால், அங்குள்ளவர்கள் குறைந்த விலைக்கே மொத்தமாக வாங்கி செல்கின்றனர் என்றார்.

மேலும் செய்திகள்