கோவையில் பலத்த மழை, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

கோவையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2019-10-17 22:00 GMT
கோவை,

கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. நேற்று அதிகாலையில் இருந்தே மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை காலை 7 மணி வரை நீடித்தது.

பின்னர் வெயில் அடித்தது. மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் மாலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சில இடங்களில் லேசாக மழை தூறியது. மாலை 5.30 மணிக்கு திடீரென்று பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக கோவை அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு ஆகிய ரோடுகளில் மழைநீர் ஆறாக ஓடியது. அந்த தண்ணீரில் தத்தளித்தபடி வாகனங்கள் சென்றன. மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பும் நேரத்தில் மழை பெய்ததால் பலர் நனைந்தபடி சென்றனர். சிலர் இருச்சக்கர வாகனங்களில் குடைகளை பிடித்தபடி சென்றனர்.

மேலும் அவினாசி ரோடு மேம்பாலம், வடகோவை மேம்பாலம், ரெயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் பாலத்தின் கீழ்ப்பகுதியில் மழைநீர் குளம்போன்று தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர்.

கோவைப்புதூர் குழந்தை ஏசு ஆலயம் அருகே நேற்று மாலை காய்கறி சந்தை நடந்தது. அங்கு கனமழை பெய்ததால் காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

கோவை உக்கடம் கரும்புக்கடை பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. அதில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய போது வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தன. இதனால் அந்த வீடுகளில் வசிப்பவர்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்புகளை சரிசெய்து மழைநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

அதுபோன்று சில இடங்களில் ரோட்டின் ஓரத்தில் நின்ற மரங்களும் முறிந்து கீழே விழுந்தன. அவற்றை நெடுஞ்சாலைத்துறை, மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், இடிகரை, கூடலூர் கவுண்டம்பாளையம், வீரபாண்டி, நாயக்கன்பாளையம், கோவனூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவில் இருந்தது.

கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் 44 மி.மீட்டரும், அடிவாரத்தில் 33 மி.மீட்டரும் மழையளவு பதிவாகி உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 43 அடியாக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்