தேவூர் அருகே நடைபயிற்சிக்கு சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் கால்வாயில் மூழ்கி பலி

தேவூர் அருகே நடைபயிற்சிக்கு சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் கால்வாயில் மூழ்கி பலியானார்.

Update: 2019-10-17 22:45 GMT
தேவூர், 

தேவூர் அருகே உள்ள அரசிராமணி பேரூராட்சி குள்ளம்பட்டி புதுவளவு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 63). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.

இதே போல நேற்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றார். குள்ளம்பட்டி கால்வாய் கரைப்பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்ட போது தவறி கால்வாயில் விழுந்து மூழ்கினார். கால்வாயில் தண்ணீர் அதிகமாக ஓடியதால், அவர் அடித்துச் செல்லப்பட்டார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்து தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் எடப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை 5 மணி முதல் 10 மணி வரை தீயணைப்பு வீரர்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதனிடையே வெங்கடாசலம் கால்வாயில் விழுந்த குள்ளம்பட்டியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லம்பாளையம் குட்டையன்காடு பகுதியில் அவரது உடல் மிதந்தது. இதை அறிந்த தீயணைப்பு துறையினர், போலீசார் அங்கு சென்று, வெங்கடாசலத்தின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடைபயிற்சிக்கு சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் கால்வாயில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்