ஈரோடு அருகே, லாரி உரிமையாளர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோடு அருகே லாரி உரிமையாளர் வீட்டில் 16 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-10-17 22:30 GMT
ஈரோடு, 

ஈரோடு அருகே உள்ள முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் இருசப்பன் (வயது 39). லாரி சொந்தமாக வைத்து உள்ளார். இவருடைய மனைவி சுமதி. இவர்களுடைய 2 மகள்களும் மூலப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசப்பன் வேலை காரணமாக கொல்கத்தாவுக்கு சென்றார். சுமதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து அவருடைய மகள்களும் பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் இருசப்பனின் இளைய மகள் பள்ளிக்கூடம் முடிந்ததும் முள்ளாம்பரப்பில் உள்ள வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் சுற்றுச்சுவர் கதவை திறந்துவிட்டு உள்ளே சென்றபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சுமதிக்கு தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 16 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரம் திருட்டுப்போய் இருந்தது தெரியவந்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ பதிவுகளை போலீசார் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்