பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்

பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் பள்ளி மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Update: 2019-10-17 23:00 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக அரியலூர் மாவட்ட அளவிலான 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான தடகள போட்டிகள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் உத்தரவின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர்கள் செல்வராஜ் (அரியலூர்), மணிமொழி (செந்துறை), செல்வராசு (உடையார்பாளையம்) ஆகியோர் வழிக்காட்டுதலின்படி அரியலூர் விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த தடகள போட்டிகளை அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக் குமார் ராஜா, மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தடகள போட்டிகள் மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.

இதில் மாணவ- மாணவி களுக்கான 200, 600, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடை தாண்டும் ஓட்டம், மும்முறை தாண்டுதல் ஓட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், கோலூன்றி தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.

திறமைகளை வெளிப்படுத்தினர்

மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில், ஏற்கனவே அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய குறு வட்டங்கள் அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 2 இடத்தை பிடித்த மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தடகள போட்டிகள் தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. தடகள போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு இன்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கவுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகன் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்துள்ளனர்.

கபடி, ஹேண்ட்பால் உள்ளிட்ட குழுப்போட்டிகளும் நடைபெறவுள்ளது. தடகள போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்- வீராங்கனைகளும், குழுப்போட்டிகளில் முதல் இடம் பிடிக்கும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்