அணைகளின் நீர்மட்டம் உயர்வு: கொடைக்கானலில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை

கொடைக்கானலில் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-10-17 23:00 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் பகலில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று காலை 8½ மணி வரை கொடைக்கானல் போட்கிளப்பில் 125 மில்லி மீட்டர் மழையும், அப்சர்வேட்டரியில் 103 மி.மீட்டர் மழையும் பதிவானது.

பலத்த மழை எதிரொலியாக கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணையின் நீர்மட்டம் (21 அடி) ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 18.2 அடியாக உள்ளது. இதேபோல் 36 அடி உயரம் கொண்ட புதிய அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 28 அடியாக உள்ளது. மேலும் கொடைக்கானல் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் ஏரிச்சாலை முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தண்ணீர் தேங்கி நிற் கிறது. இதனால் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் இருந்து உபரிநீர் அதிகமாக வெளியேறுகிறது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த மழையின் காரணமாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் மச்சூர் கிராமத்தின் அருகே அதிகாலை 5 மணி அளவில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ஒரு மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும், நெடுஞ்சாலைத்துறையினரும் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. இந்த மழையால் செண்பகனூர் உள்பட 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எனவே பருவமழை காலம் தொடங்கி உள்ள நிலையில் மலைப்பாதையில் விழும் மரங்களை உடனடியாக அகற்றவும், சேதமடைந்த மலைப்பாதையை சீரமைக்கவும், பெருமாள்மலை பகுதியில் மீட்புக்குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே நேற்று பிற்பகல் 3 மணி முதல் இரவு வரை கொடைக்கானலில் அவ்வப்போது சாரல்மழை பெய்த வண்ணம் இருந்தது.

மேலும் செய்திகள்