நாகர்கோவில் நிதிநிறுவனத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி மோசடி 3 பேர் மீது வழக்கு

நாகர்கோவிலில் நிதிநிறுவனத்தில் போலி ஆவணம் மூலம் ரூ.1 கோடி மோசடி செய்த 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-10-17 22:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் ராமவர்புரத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன்் கிளை மேலாளர் மணவாளன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் என்பவர் என்னிடம்(மணவாளன்) பல வாகனங்கள் இருப்பதாக கூறி எங்களது நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.1 கோடியே 1 லட்சத்து 33 ஆயிரத்து 769 கடனாக பெற்றார். இதற்காக அவருக்கு தெரிந்த பாலசுப்பிரமணியன், முருகேசன் ஆகியோர் ஜாமீன் கையெழுத்து போட்டு தந்தனர்.

போலி ஆவணம்

ஆனால் சத்தியசீலன் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது பல நிறுவனங்களில் சத்தியசீலன் வாகனங்களை வைத்து கடன் பெற்று இருப்பது தெரியவந்தது. அதேபோல் எங்கள் நிறுவனத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணம் பெற்று இருப்பதும் தெரியவந்தது.

எனவே சத்தியசீலன் உள்பட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து ரூ.1 கோடியே 1 லட்சத்து 33 ஆயிரத்து 769 பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

அதன்பேரில் சத்தியசீலன் உள்பட 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்