ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளை மர்ம வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

மணப்பாறை அருகே ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்து சென்ற மர்ம வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-10-17 23:00 GMT
மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த புதுப்பட்டியில் சாலையோரத்தில் வீரசந்தியாகப்பர் ஆலயம் உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலயம் மாலை நேரத்தில் பூட்டப்பட்டு விடும்.

இந்நிலையில் நேற்று காலை ஆலயம் பூட்டப்பட்டிருந்தது. ஆனால் அதில் உள்ளே உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த பொதுமக்கள், இது பற்றி ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்தவற்றை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உண்டியலில் சுமார் ரூ.75 ஆயிரத்திற்கும் மேல் இருந்த பணம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

பின்னர் இதுபற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆலயத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.

அதில், ஆலயத்தின் பின்புறமாக சுவர் ஏறிக்குதித்து உள்ளே வரும் மர்ம வாலிபர் ஒருவர், முதலில் சுற்றிச்சுற்றி பார்த்துவிட்டு, ைகயெடுத்து கும்பிட்ட பின்னர் காலணிகளை வெளியே கழற்றி வைத்து விட்டு, ஒரு கம்பியை எடுத்து வந்து உண்டியலை உடைக்க முயற்சி செய்வதும், சுமார் 15 நிமிட போராட்டத்திற்கு பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை ஒரு துணியில் கட்டி எடுத்துக்கொண்டு, மீண்டும் காலணியை மாட்டிக்கொண்டு செல்வதும், பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆலயத்தில் ஏற்கனவே 4 முறை கொள்ளை சம்பவம் நடந்த நிலையில், தற்போது 5-வது முறையாக கொள்ளை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்