மதுரை- போத்தனூர் அகலப்பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்காதது ஏன்? பயணிகளை ஏமாற்றி வருவதாக புகார்

மதுரையில் இருந்து பழனி வழியாக போத்தனூர், பாலக்காடுக்கு மீட்டர்கேஜ் பாதையில் ஓடிய ரெயில்களை இயக்காமல் ரெயில்வே அமைச்சகம் ஏமாற்றி வருவதாக பயணிகள் தரப்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது.

Update: 2019-10-18 23:00 GMT
மதுரை,

மதுரையில் இருந்து திண்டுக்கல், பழனி வழியாக மீட்டர்கேஜ் பாதையில் கோவை மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர், இந்த ரெயில்பாதை அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்ட பின்னர், அந்த ரெயில்கள் இயக்கப்படவில்லை.

அதாவது, மதுரையில் இருந்து பழனி செல்லும் ஒரேஒரு பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் பாசஞ்சர் ரெயில் ஆகியவை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சேவா ரெயில்கள் என்ற பெயரில் புதிய ரெயில்கள் சென்ற வாரம் மத்திய ரெயில்வே அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், இந்த ரெயில்கள் முற்றிலும் ஏற்கனவே இயங்கி வந்த ரெயில்கள் என்பதும், நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதுரை ரெயில்வே கோட்டத்தில் திண்டுக்கல்-பொள்ளாச்சி-போத்தனூர் இடையே அகல ரெயில்பாதை பணிக்காக கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது அகல ரெயில்பாதை பணிகள் முடிந்து 2 வருடங்கள் கடந்த பின்னரும் மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக போத்தனூர் (கோவை) மற்றும் பாலக்காடுக்கு மீட்டர்கேஜ் பாதையில் ஓடிய ரெயில்கள் இயக்கப்படவில்லை.

*அதாவது, மதுரையில் இருந்து போத்தனூர் எக்ஸ்பிரஸ்(வ.எண்.6708) ஞாயிற்றுக்கிழமை தவிர தினசரி காலை 6.45 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு காலை 9.15 மணிக்கு சென்றடைந்தது. போத்தனூருக்கு மதியம் 12.15 மணிக்கு சென்றடைந்தது.

* பாசஞ்சர் ரெயில் மதுரையில் இருந்து போத்தனூர், பாலக்காடுக்கு இயக்கப்பட்டது. அந்த ரெயில் (வ.எண்.776) மதுரையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு காலை 11.45 மணிக்கு சென்றடைந்தது. மதியம் 2 மணிக்கு பாலக்காடு சென்றடைந்தது. அதேபோல, பொள்ளாச்சியில் இருந்து வ.எண்.776-ஏ மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் சென்றது.

*மதுரையில் இருந்து (வ.எண்.768) மதியம் 12.40 மணிக்கு ஒரு பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு மாலை 6 மணிக்கு பொள்ளாச்சி சென்றடைந்தது. இரவு 8 மணிக்கு பாலக்காடு சென்றது. இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து காலை புறப்படும். மேலும் பாலக்காட்டில் இருந்து மங்களூரு, குருவாயூர், திருச்சூரு, திருவனந்தபுரம் இணைப்பு ரெயில்கள் இருந்தன.

*மதுரையில் இருந்து (வ.எண்.778) மதியம் 2.40 மணிக்கு ஒரு பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு போத்தனூர்(கோவை) சென்றடைந்தது.

*மதுரையில் இருந்து (வ.எண்.764) இரவு 9.45 மணிக்கு பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு அதிகாலை 3.55 மணிக்கு பாலக்காடு ரெயில்நிலையம் சென்றடைந்தது. இந்த ரெயில் ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் வகையில் இயக்கப்பட்டது.

*மதுரையில் இருந்து (வ.எண்.6716) இரவு 10.50 மணிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு போத்தனூர்(கோவை) ரெயில்நிலையம் சென்றடைந்தது.

*மறுமார்க்கத்திலும் மதுரைக்கு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதுதவிர, மதுரை-திண்டுக்கல்லுக்கும், திண்டுக்கல்-போத்தனூருக்கு இடையேயும் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டன.

இந்த ரெயில்களை இயக்குவதற்கு பதிலாக மதுரை-பழனி பாசஞ்சர் ரெயிலை கோவை வரை நீட்டித்து சேவா ரெயில் என ரெயில்வே அமைச்சம் தெரிவித்துள்ளது. அதாவது, பழனி-கோவை இடையே இயக்கப்படும் சேவா ரெயில், மதுரையில் இருந்து காலை 7.45 பழனி புறப்படும் பாசஞ்சர் ரெயில், பழனியில் இருந்து காலை 10.45 மணிக்கு கோவை புறப்பட்டு செல்கிறது.

மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு பழனி புறப்படும் பாசஞ்சர் ரெயில், பழனியில் இருந்து மாலை 4.45 மணிக்கு மதுரை புறப்பட்டு வருகிறது. அதேபோல, சேலம்-கரூர் இடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெமு பாசஞ்சர் ரெயில்கள் கரூர்-திருச்சி மற்றும் கரூர்-சேலம் டெமு ரெயிலாக ஏற்கனவே ஓடிக்கொண்டுள்ளன.

2 பாசஞ்சர் ரெயிலாக ஓடிக்கொண்டிருந்த ரெயில்கள் தற்போது ஒரே ரெயிலாக இயக்கப்படுகின்றன. அதேபோல, பொள்ளாச்சி-கோவை இடையே காலை மற்றும் மாலையில் தலா ஒரு சிறப்பு பாசஞ்சர் ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் மட்டும் இயக்கப்பட்டது. இதில், காலை நேரத்தில் இயக்கப்பட்ட ரெயில் மட்டும் வாரம் முழுவதும் இயக்கப்படும் தினசரி ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் சேவா ரெயில் என அறிவித்துள்ளது ரெயில்வே துறையின் ஏமாற்று வேலை என்று பயணிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்