மராட்டிய சட்டசபை தேர்தலில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது

மராட்டிய சட்டசபை தேர்தலில் நடைபெற்று வந்த அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

Update: 2019-10-20 00:22 GMT
மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நாளை (திங்கட்கிழமை) தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலை ஆளும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் சந்திக்கின்றன.

இதுதவிர ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ஒவைசி தலைமையிலான எம்.ஐ.எம். கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.

இந்த தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களான முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரிகள் அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான், யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே, பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 237 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 235 பேர் பெண்கள்.

ஆளும் பா.ஜனதா 164 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 147 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா 101 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. இதுதவிர இந்திய கம்யூனிஸ்டு கட்சி 16 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 8 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 262 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

1,400 சுயேச்சை வேட்பாளர்களும் ேதர்தல் களத்தில் இருக்கிறார்கள்.

வேட்பு மனு தாக்கல் முடிந்த பின்னர் கடந்த 2 வாரமாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வந்தது. தலைவர்கள் போட்டி போட்டு பொதுக்கூட்டங்களில் பேசி வாக்கு சேகரித்தனர்.

பிரதமர் மோடி 9 பொதுக்கூட்டங்களில் பேசி பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதில் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களான உத்தவ் தாக்கரே, ராம்தாஸ் அத்வாலே ஆகியோருடன் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தார்.

பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பேசினார். மேலும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் மற்றும் பல மத்திய மந்திரிகள் மராட்டியத்தை முற்றுகையிட்டு பா.ஜனதா, சிவசேனா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு வேட்டை நடத்தினர்.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார்.

இதேபோல காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 6 பொதுக்‌கூட்டங்களில் பேசினார். மேலும் மல்லிகார்ஜூன கார்கே உள்பட பல மேலிட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்களான அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான், மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் ஆகியோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

78 வயதான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது கட்சி வேட்பாளர்களுக்காகவும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களுக்காகவும் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் அவர் சத்தாராவில் கொட்டும் மழையில் நனைந்தபடி பிரசாரம் செய்தது தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.

இதேபோல நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி ஆகிய தலைவர்களும், அந்தந்த கட்சி வேட்பாளர்களும் போட்டி போட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

மராட்டிய தேர்தல் பிரசார களத்தில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை மையமாக கொண்டு பா.ஜனதா பிரசாரம் செய்தது. 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கையில் வெளியிட முடியுமா? என்று பிரதமர் மோடி எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்தார்.

ராகுல்காந்தி நாட்டில் பொருளாதார மந்தநிலை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை சுட்டிக் காட்டி பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். காஷ்மீருக்கான 370-வது சட்டப்பரிவு ரத்துக்கும், மராட்டிய சட்டசபை தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் என்று அவர் பா.ஜனதாவினருக்கு பதிலடி கொடுத்தார். மராட்டியத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அமைய ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இறுதி நாளான நேற்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் தொகுதியில் தங்களது பலத்தை காண்பிப்பதற்காக பிரமாண்ட ஊர்வலங்களை நடத்தினார்கள். இதில் அந்தந்த கட்சி தொண்டர்கள் அதிகளவில் கலந்து கொண்டு ஆரவாரத்துடன் தொகுதி முழுவதும் வலம் வந்தனர். பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் இறுதி நாளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. பிரசாரத்தின் போது காதை துளைத்த ஒலி பெருக்கிகள் அமைதியடைந்தன.

மேலும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத அரசியல் தலைவர்கள் வெளியேறுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. கள்ள ஓட்டை தடுக்க தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் யாரும் இருக்கிறார்களா என்று திருமண மண்டபம், ஓட்டல் போன்ற இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மராட்டியத்தில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. 8 கோடியே 98 லட்சத்து 39 ஆயிரத்து 600 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். இவர்களில் 4 கோடியே 68 லட்சத்து 75 அயிரத்து 750பேர் ஆண்கள். 4 கோடியே 28 லட்சத்து 43 ஆயிரத்து 635 பேர் பெண்கள்.

மொத்த வாக்காளர்களில் 1 கோடியே 6 லட்சத்து 76 ஆயிரத்து 13 பேர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள்.

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது. வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மேலும் செய்திகள்