நீலகிரியில் தொடரும் மழை, கோத்தகிரியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு - வீடுகள் இடிந்தன

நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கோத்தகிரியில் மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-10-20 22:30 GMT
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மஞ்சூர், கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த தொடர் மழையால் மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வருவதுடன், மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் வீடுகள் இடிந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்

கோத்தகிரியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை பெய்த மழையால் கோத்தகிரியிலிருந்து கன்னேரிமுக்கு செல்லும் சாலையின் குறுக்கே கற்பூர மரம் ஒன்று வேருடன் விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக செல்லும் அரசு பஸ்கள் மற்றும் வாகனங்கள் மி‌‌ஷன் காம்பவுண்ட் வழியாக திருப்பி விடப்பட்டன.

இது குறித்து தகவலறிந்த கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரம் அகற்றப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இதனிடையே பலத்த மழையால் ஜெகதளா ஊராட்சிக்குட்பட்ட ஒசட்டிகாலனியை சேர்ந்த லட்சுமி என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு உரிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

பந்தலூர் தாலூகா பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பந்தலூர் அருகே செம்மன்வயல் ஆதிவாசி காலனியில் உள்ள கேசவன் என்பவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இதுகுறித்த தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், பந்தலூர் தாசில்தார் கிரு‌‌ஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கிரீஜா, கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.

மேலும் செய்திகள்