கோவில்பட்டி அருகே, ஆட்டோ- கார் மோதல்; மாணவர்கள் உள்பட 9 பேர் காயம்

கோவில்பட்டி அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-10-20 22:15 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த மாணவ- மாணவிகள் 10 பேரை பள்ளி ஆசிரியை அமுதா என்பவர், நாலாட்டின்புதூரில் நடந்த பேச்சு போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலையில் அழைத்து சென்றார்.

மாலையில் போட்டி முடிந்த பின்னர் அவர்கள் ஆட்டோவில் மீண்டும் பள்ளிக்கு திரும்பினர். வரும் வழியில் ஆட்டோவில் டீசல் இல்லாததால் டீசல் போடுவதற்காக ஆட்டோ டிரைவர் இளையரசனேந்தலை சேர்ந்த ராஜ்குமார் (வயது 36) என்பவர் ஆட்டோவில் கோவில்பட்டி ஊருக்குள் செல்வதற்காக இளையரசனேந்தல் சந்திப்பு பகுதியில் வந்தார்.

அப்போது கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் உள்பட பள்ளி மாணவர்கள் 9 பேர் காயம் அடைந்தனர். இதில் மாணவி வனிதா (12), அக்‌ஷயா (13), மாணவர் கணேஷ்குமார் (10) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக மாணவர் கணேஷ்குமார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த மதுரையை சேர்ந்த சின்னப்பன் மகன் அமல்ராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்