கூடுவாஞ்சேரி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் ஆய்வு

கூடுவாஞ்சேரி அருகே உள்ள நந்திவரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் ஆய்வு நடத்தி நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Update: 2019-10-21 23:00 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நந்திவரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் வந்து ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி ஆய்வு செய்தார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில் இருந்தது. இதனைப் பார்த்த சுகாதார செயலாளர் தேங்கிய மழைநீரை உடனே அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சுகாதார நிலையத்தில் மருந்து வழங்கப்படும் இடங்களில் இருந்த நோயாளிகளிடமும், காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

இதன் பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை 250 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதற்காக என்ன என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பது பற்றி இன்று செங்கல்பட்டில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் தரப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவமனைக்கு டெங்கு காய்ச்சல் குறித்து பல்வேறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, செங்கல்பட்டு சுகாதார துணை இயக்குனர் பழனி, காஞ்சீபுரம் சுகாதார துணை இயக்குனர் செந்தில்குமார், செங்கல்பட்டு மலேரியா தடுப்பு அலுவலர் சாந்தி, நந்திரவம் சுகாதார நிலைய மருத்துவர் வெங்கடேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சபாபதி உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்